சர்வதேச புகைப்பிடித்தலுக்கெதிரான தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சு மற்றும் புகையிலை போதைப்பொருள் தொடர்பான தேசிய அதிகார சபை என்பன கூட்டாக இணைந்து பாடசாலை மாணவர்களிடையில் கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளன.
இப்போட்டியில், ஆரம்ப பிரிவைச் சேர்ந்த 3ஆம், 4ஆம் தர மாணவர்களிடையே ‘புகைபிடிக்காத எனது அப்பா எமது சொத்தாகும்’ என்னும் தலைப்பிலும், கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த 6ஆம் தரம் தொடக்கம் 9ஆம் தர மாணவர்களிடையே ‘புகைபிடிப்பதனால் பணமும் வாழ்க்கையும் சந்தோஷமும் தொலைந்து விடுகின்றன’ எனும் தலைப்பிலும், சிரேஷ்ட பிரிவைச் சேர்ந்த 10ஆம் தரம் தொடக்கம் 13தரம் வரையிலான மாணவர்களிடையே ‘புகையிலைக் கம்பனிகளின் தற்போதைய தந்திரோபாயமாகிய மறைமுகமான பிரச்சார உத்திகளுக்கு மத்தியில் இளைஞர்களின் பொறுப்புணர்ச்சி, புகையிலைக் கம்பனிகளினால் இலங்கையின் இளஞ்சந்ததியினருக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால்’ என்னும் தலைப்பிலும் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.
போட்டியில் முதலாம் இடத்தை பெறும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடத்தைப் பெறும் மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடத்தை பெறும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், நான்காவது இடம் தொடக்கம் 10ஆம் இடம் வரை பரிசு பெறுபவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
எனவே, மாணவர்கள் தங்கள் ஆக்கங்களை ரேணுகா பீரிஸ் கல்விப் பணிப்பாளர் பாடசாலை சுகாதாரம் மற்றும் போஷனைப் பிரிவு முதலாம் மாடி கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்ல என்ற முகவரிக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.