யாழ். மாவட்டத்தில் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறுகிய இலாபத்திற்காக அதனை விற்பனை செய்வதை நிறுத்தி, சமூக முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்க முன்வரவேண்டும் என யாழ்ப்பாணம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்.வணிகர் கழக கட்டிடத்தில் சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, யாழ். வர்த்தக சங்க தலைவர் எஸ்.ஜெயசேகரம், செயலாளர் என்.ஜெனத்குமார் ஆகியோர் இணைந்து மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர்.
எதிர்வரும் தீபாவளித் திருநாள் முதல், இத்தகைய புகையிலை பொருட்கள் மற்றும் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தி, சமூகத்தின் எதிர்காலம் திடகாத்திரமாக, சுகாதாரமாக உருவாக வர்த்தகர்கள் வழிகாட்டிகளாக அமைய வேண்டும் என அவர்கள் கூறினர்.
புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், தமது வர்த்தக நிறுவனங்களில் புகைத்தலால் எற்படக்கூடிய கேடுகள் சம்பந்தமான அறிவித்தல் பலகையை காட்சிப்படுத்துவது அவசியமாகும்.
இதேபோன்று புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யும் போது புகைத்தல் பொருட்களை வாங்குபவர் 21 வயதுக்கு மேற்பட்டவரா என்பதை உறுதிப்படுத்துவதுடன், குறிப்பிட்ட புகைத்தல் பொருட்கள் யாரிடம் பெறப்பட்டன என்பதை தெளிவாக அறிந்து வைத்திருப்பதுடன் உரிய விபரங்களையும் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் முன்பாக மற்றும் பொது இடங்களில் யாரும் புகைத்தல் பொருட்களை பயன்படுத்த முடியாது, ஆகையால் புகைத்தலுக்கு என தனியான அறை வர்த்தக நிலையங்களில் அமைக்கப்பட்டு இருத்தல் அவசியம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.