புகழ்ந்து பேசியதை தவறாக புரிந்து விட்டனர்: தெண்டுல்கர் பற்றிய விமர்சனத்துக்கு கபில்தேவ் விளக்கம்

‘சச்சின் தெண்டுல்கர் தனது திறமைக்கு தகுந்தபடி விளையாடவில்லை. கருணையின்றி அவர் அதிரடி ஆட்டம் ஆடி இருந்தால் இன்னும் பல சாதனைகள் செய்து இருக்கலாம். மும்பை கிரிக்கெட் பாணியில் அதிகம் மூழ்கி விட்ட அவர் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்று அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். சதத்தை இரட்டை சதம், முச்சதம், 400 ரன்களாக எப்படி மாற்றுவது என்பதை அவர் கற்று கொள்ளாமல் விட்டு விட்டார்’ என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் துபாய் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

30Kapil-Dev-1-tendul-kar

இந்த விமர்சனத்துக்கு தெண்டுல்கர் பதில் எதுவும் கூறவில்லை என்றாலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மும்பையை சேர்ந்தவருமான அஜித் வடேகர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்திய அணியின் வெற்றிக்காக மட்டுமே தெண்டுல்கர் விளையாடினார் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தெண்டுல்கர் குறித்த விமர்சனத்துக்கு கபில்தேவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

கபில்தேவ் இன்னொரு டெஸ்ட் அரை சதம் எடுக்கமாட்டார் என்று சுனில் கவாஸ்கர் என்னை பார்த்து கூறுவதுண்டு. அவர் எனது நல்லதுக்கு தான் அப்படி சொல்வார். அடுத்த போட்டியில் நான் அரை சதம் அடித்தேன் (பாகிஸ்தானுக்கு எதிராக 79 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தேன்). அதன் பிறகு சென்னையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் அடித்தேன். நான் மேலும் 5 ஆயிரம் ரன்கள் எடுத்து இருக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் சொல்லியது உண்டு. நான் இன்னும் எனது பேட்டிங்கை சீரியசாக எடுத்து கொண்டு இருக்க வேண்டும் என்பதை இப்போது தான் ஒப்புக்கொள்கிறேன். கவாஸ்கரின் இந்த கருத்துகளை நான் தவறாக எடுத்து கொள்ளவில்லை. எனக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே அதனை கருதினேன்.

தெண்டுல்கரை எப்போதும் விலைமதிக்க முடியாத வீரர் என்றே கூறி வந்து இருக்கிறேன். விவியன் ரிச்சர்ட்சை விட தெண்டுல்கர் திறமை மிக்கவர். கருணையற்ற முறையில் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து விளையாடும் திறமை அவரிடம் இருந்தது. ஆனால் அதனை நான் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர் அமல்படுத்தவில்லை என்று தான் சொன்னேன். அவர் 100 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் அவரது ஆற்றல் அதனை விட பெரியது. வேறு எப்படி அவரை நான் வர்ணிக்க முடியும். அவர் தனது திறமைக்கு தகுந்தபடி சாதிக்கவில்லை என்பது புகழுரை தான். அதனை தவறாக புரிந்து கொண்டு விட்டனர். அவர் இன்னும் நன்றாக விளையாடி இருக்க முடியும் என்று நான் கூறுவது தவறா?

தெண்டுல்கர் அலை வீசிய காலத்தில் நான் அவருக்கு எதிராக பந்து வீசி இருக்கிறேன். நான் வீசிய பந்தை அவர் மிட் ஆப் திசையில் சிக்சருக்கு தூக்கினார். என்னை ஏதோ ஒரு ஆப்-ஸ்பின்னர் போல் நினைத்து அவர் அடித்தார். நான் சற்று ஆடித்தான் போனேன். அவரது திறமை என்னை வியக்க வைத்தது. தெண்டுல்கர் அவரது காலத்தையும் விஞ்சி நிற்கும் வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ? அப்படி அவர் வரவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. சார்ஜாவில் 1998-ம் ஆண்டில் அவர் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை பந்தாடியது என் நினைவில் உள்ளது. அவர் தனது அதிரடியால் சிறந்த பவுலரையும் சாதாரண பவுலர் போல செய்து விடுவார். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முன்னேற்றம் கண்ட போது அந்த ஆதிக்க தன்மை அவரிடம் இல்லை. அதனை அவர் எங்கோ இழந்து விட்டார்.

மும்பை வீரர்களின் திறமையை நான் சந்தேகப்பட்டால் நான் ஒரு முட்டாளாகவே கருதப்பட வேண்டியவன். மும்பை அணியினர் 40 முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளனர். அதில் 15 தடவை தொடர்ச்சியாக வென்றுள்ளனர். இது ஒரு வியக்கதக்க சாதனையாகும். மும்பைக்கு வெளியே இருந்து வரும் வீரர்கள் மும்பை வீரர்களை பார்த்து ஆட்ட தொழில் நுணுக்கத்தை கற்று கொண்டனர். மும்பை பேட்ஸ்மேன்கள் சரியான நுணுக்கத்துடன் விளையாடுபவர்கள். அதன் காரணமாக ரிவர்ஸ் ஸ்வீப், அப்பர் கட் ஆட்டங்களை விளையாடமாட்டார்கள். ஆனால் தற்போது ஆட்டம் மாறி விட்டது. இனிமேல் கருணையற்ற முறையில் அடித்து தான் ஆட வேண்டும்.

சந்தீப் பட்டீல், வினோத் காம்ப்ளி தவிர அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களை மும்பை உருவாக்கவில்லை. தற்போது ரோகித் சர்மா, ரஹானே வந்துள்ளனர். இவர்களது பேட்டிங் வித்தியாசமானது. பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர். மும்பை கிரிக்கெட்டை நான் மதிக்கிறேன். இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் அவர்களே. ஆனால் ஆட்ட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் நேரம் வந்து விட்டது. இது மும்பை, டெல்லி, அரியானா கிரிக்கெட் பற்றியது அல்ல. இந்திய கிரிக்கெட் பற்றிய விவகாரமாகும். மேலும் நான் உண்மையான இந்தியன் என்பதை அஜித் வடேகர் புரிந்து கொள்ள வேண்டும். அதில் மும்பையும் ஒரு பகுதி தான். நானும் மும்பைவாசி தான். போதும் என்ற மனம் ஒருவருக்கு ஒரு கால கட்டத்தில் வந்து விடும். ஆனால் தெண்டுல்கரை பொறுத்தமட்டில் போதும் என்று நாம் நினைத்து விட முடியாது. அவர் மென்மேலும் மதிப்பு மிக்கவர். இதனை தான் நான் கூறினேன். இளைய சகோதரர் பற்றி மூத்த சகோதரர் ஒருவர் தான் நினைத்ததை கூறக்கூடாதா?

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

Related Posts