புகலிடம் கோரும் வடக்கு மக்களை அவுஸ்ரேலியா மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்

எமது நாட்டில் காணப்படும் பாதுகாப்பற்ற நிலையை கருத்திற்கொண்டு, அவுஸ்ரேலியாவிடம் புகலிடம் கோரும் வட. மாகாண மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்ரேலிய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியரவன்ரி-வெல்ஸ் உள்ளிட்ட குழுவினருக்கும், வட. மாகாண முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கைத்தடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து அவுஸ்ரேலிய அமைச்சர் உள்ளிட்ட குழவினருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

“பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதில் அரசியல் ரீதியான செயற்பாடுகள் காணப்படுகின்றன. வறுமை நிலைமை மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் மக்கள் மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். போரின் பின்னர் நடைபெற்ற விடயங்களை உயர் மட்டங்களில் பேசாது, போருக்கு காரணமான விடயங்கள் குறித்து ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின், அது மேலும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் ஆகிய விடயங்களை சுட்டிக்காட்டினேன்.

அதேவேளை, மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்துகின்றீர்களா என்று அவுஸ்ரேலிய அமைச்சர் வினவியிருந்த நிலையில், எமக்கு தரப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்துகின்ற போதிலும், எமக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமல் உள்ளதென எடுத்துரைத்துள்ளேன்.

அதன்படி, வட. மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கான நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சுழல் நிதியம் ஒன்றினை ஏற்படுத்தி தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவ்வாறு சுழல் நிதியம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்” என்றார்.

Related Posts