பீரிஸிடம் இரண்டரை மணிநேரம் சி.ஐ.டியினர் விசாரணை

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொரள்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். பீரிஸிடம் சி.ஐ.டியினர் இரண்டரை மணிநேரம் துருவித்துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், மறுநாள் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அது பற்றி பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த வெடிபொருட்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்தவை என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஜி.எல்.பீரிஸிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில், நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு வருமாறு, ஜி.எல்.பீரிஸ் அழைக்கப்பட்டிருந்தார். இதன்படி தனது சட்டத்தரணி சகிதம் அவர் அங்கு சென்றிருந்தார்.

பீரிஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, நாமல் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க ஆகியோரும் உடன் சென்று, சி.ஐ.டி. தலைமையத்துக்கு முன்னர் காத்துக்கிடந்தனர்.

பீரிஸ் மாத்திரம் சட்டத்தரணி சகிதம் உள்ளே சென்றார். இதன்போது அவரிடம் இரண்டரை மணிநேரம் துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“வெடிபொருட்கள் வெள்ளவத்தைக்கு கொண்டுவரவிருந்தன என்பது எப்படி தெரியும் என எழுப்பட்ட கேள்விகளுக்கு நான் உரிய வகையில் பதில்களை வழங்கினேன்.

தேசிய பாதுகாப்பு மீதான நலன் கருதித்தான் நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதை நல்லாட்சி அரசு அரசியல் நிகழ்ச்சி நிரலாக்கிவிட்டது” – என்றார்.

Related Posts