பீப் பாடல் விவகாரம்: கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி அனிருத் விளக்கம்

பீப் பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள், சிம்பு மற்றும் இந்த பாடலுக்கு இசையமைத்ததாக கூறப்படும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் உட்பட பல போலீஸ் நிலையங்களில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத்துக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், குறித்த தேதியில் தான் வெளிநாட்டில் சர்வதேச இசை நிகழ்ச்சி நடத்தியதால் வர இயலவில்லை எனவும் பீப் பாடல் குறித்த விளக்கத்தையும் அனிருத் தரப்பில் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டதாக அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவை ரேஸ் கோர்ஸ் நீதிமன்றத்தில் அனிருத் நேற்று(ஜனவரி 11) நேரில் ஆஜராவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரை அனிருத் ஆஜராவது குறித்து செய்திகள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் காவல் நிலையத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அனிருத் தனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜரானார். இந்த செய்தியை அனிருத் தனது மைக்ரோ பிளாக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அதில், “என்னை கேட்டுக் கொண்டதற்கு இணங்க கோவை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி” என்று அனிருத் கூறியுள்ளார்.

Related Posts