பீப் பாடலால் ஏற்பட்ட களங்கத்தை என் கண்ணீரால் துடைக்க விரும்புகிறேன் ! டி.ஆர்

நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக வெளிவந்த ‘பீப் சாங்’ பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த பீப் பாடல் வெளியானது குறித்து நடிகர் சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தரும் இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும்விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, இந்தப் பாடல் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றது அல்ல. இது தனிப்பட்ட முறையில் ஆல்பமாக வெளியான பாடலும் அல்ல. அதேசமயத்தில் முழுமையான வடிவம் பெற்ற பாடலும் அல்ல.

இந்தப் பாடல் சம்பந்தப்பட்ட சிம்பு, தொலைக்காட்சியிலோ, எப்.எம்.ரேடியோவிலோ, ஒரு அரங்கத்திலோ, மேடைக் கச்சேரியிலோ, தெருவோரத்திலோ நின்று இதை பாடவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பாடல் முறைப்படியாக ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யப்படவில்லை. இது, ஒரு முழுமை பெறாத பாடல்.

அதாவது தனிப்பட்ட முறையில் ஒரு அறையில் சில டம்மி வார்த்தைகளை போட்டு பாடிவிட்டு, அதைக்கூட வேண்டாம் என்று தொழில்நுட்ப முறையிலே பீப் போட்டு மூடி வைத்துவிட்டு, ஒருகட்டத்தில் அந்தப் பாடல் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டு ஓரு மூலையில் தூக்கி எறியப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட பாடல்.

அந்த பாடலை வேண்டுமென்றே, வேண்டத்தகாத விஷக்கிருமிகள் சிலர் திருடி எடுத்துச் சென்று, சிம்புவின் மேல் பெண்கள் மத்தியில் ஒரு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும், ஒரு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

எனக்கென்று ஒரு பெயரை தமிழ் சமுதாயத்தில் நான் பெற்று வைத்திருக்கிறேன். யாரோ திருடிச் சென்று வெளியிட்டுவிட்ட இந்தப் பாடல் விவகாரத்தில் என்னுடைய மகன் சிம்புவின் பெயர் மறைமுகமாக அடிபடுகிறது.

என்னுடைய தமிழ் சமுதாய மக்கள், மூத்த தாய்மார்கள் மனதில் இந்தப் பாடல் நெருடலை ஏற்படுத்துகிறது என்று சொன்னால், நான் அதற்காக வருத்தப்படுகிறேன். மனது உருகுகிறேன். என்னுடைய கண்ணீரால் அந்த களங்கத்தை உங்கள் மனதில் இருந்து துடைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

Related Posts