பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – யாழ். பல்கலை சார்பாக முறைப்பாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீட பதில் பீடாதிபதி ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை நேற்று பொலிஸ் சைபர் குற்றவியல் விசாரணையுடன் இணைந்த இணைய பாதுகாப்புக்கான தேசிய மையத்தில் வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பான முறைப்பாட்டின் பிரதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் உள்ளோர் மற்றும் சுய, நிறுவன தனிமைப்படுத்தப்பட்டோருக்கான பி.சி.ஆ.ர் பரிசோதனைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அங்கு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து பல்வேறு அநாமதேய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. அது வெற்றியளிக்காது போக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமையால் தொற்று அபாயம் உள்ளது என உண்மைக்கு மாறான செய்திகள் ஊடகங்கள் வெளிவந்திருந்தன.

அத்தகைய வதந்திகளைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்தோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் சைபர் குற்றவியல் விசாரணையுடன் இணைந்த இணைய பாதுகாப்புக்கான தேசிய மையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts