கொவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிச்செய்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களது சொத்துக்களை தடைச் செய்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.
வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டலுகம போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தெரியவந்துள்ளது.
இது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பான செயற்பாடாகும். அதனால் இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும்.
இதன்போது அவர்களது சொத்துக்களை பயன்படுத்த முடியாத வகையில் தடைமுத்திரை குத்தவும் அனுமதியுள்ளது. அதனால் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 1349 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டிகைகால கொண்டாட்டங்களின் போதும் பொதுமக்களை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கோருகின்றோம் என்றும் கூறினார்.