பிஸ்கட், ஜெலியை உண்ணகொடுத்து மாணவியை மூன்றுபேர் அழைத்து சென்றனர் : மாணவனின் திடுக்கிடும் சாட்சி!

சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த சாட்சிகள் கிடைக்காத நிலையில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதியைச் சேர்ந்த மாணவனொருவன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளான்.

சிறுமிக்கு பிஸ்கட் மற்றும் ஜெலி ஆகியவற்றை உண்ணக்கொடுத்து பின்னர் மூன்று பேர் அவரை அழைத்துச் சென்றதாகவும் அவர்களின் பெயர்களையும் சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

இதனடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸார் தற்போது தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

சுழிபுரம் – காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா (வயது-06) கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறுவர் கைதுசெய்யப்பட்டு இரண்டு தினங்களாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. நேற்று அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, சிறுமியை கொலைசெய்ததாக 21 வயதான இளைஞன் ஒருவர் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். ஏனைய ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts