பிழையான சிந்தனைகளை மாற்றி வடக்கு மாகாணத்தை பாதுகாப்போம்!

வடக்கு மாகாணம் இதுரைகாலம் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக்கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

cv-vickneswaran-cm

வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்- வடமாகாண சுகாதார அமைச்சரின் சிந்தனையில் சிதறி எழுந்து மத்திய சுகாதார அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் இந்த இரத்தமாற்று சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

8.5 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நிலையத்தில் ஒரே தடவையில் 06 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் உள்ளன. அண்மைய சுகாதார திணைக்களத்தின் ஆய்வு அறிக்கையின் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது உலகில் தொற்றும் நோய்களால் இறப்பவர்களைவிட தொற்றாத நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாகும். சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு பலகாரணங்கள் சொல்லப்பட்டாலும் இதுவரை உறுதியான முடிவேதும் மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை.

எனினும் விவாசாயசெய்கையில் கிருமிநாசினி பாவனை, செயற்கை உரப்பாவனை, குடிநீரிலுள்ள பாரலோகங்கள் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணமென எதிர்வுகூறப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மாசடைந்துள்ள எமது பிராந்தியத்தில் மக்கள் பலவித நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது கண் கூடாகத் தெரிகின்றது.

நாம் எமது பேராசையின் நிமித்தமே இப்பேர்ப்பட்ட சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையும் இத் தருணத்தில் நாம் மறக்கக் கூடாது.

விவசாய செய்கையில் கிருமிகளைக் கொல்ல எத்தனிக்கும் நாங்கள், முன்னேற்றம் காணச் செயற்கை உரத்தைப் பாவிக்க எத்தனிக்கும் நாங்கள், எம்மை மரணத்தை நோக்கி வரைவாகச் செல்ல உதவி புரிகின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. தாய் போன்ற, அன்னை போன்ற எமது நிலமானது எத்தகைய பாதிப்புக்களுக்குப் போரின் போதும் தற்போதும் உள்ளாகியுள்ளது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். வெடிகுண்டுகளும் நச்சுப் புகைகளும் எமது சுற்றுச் சூழலையும் நலத்தையும் பாதித்தன.

உடனே நல்ல அறுவடையைப் பெற வேண்டும் என்பதால் நிலத்தில் நஞ்சுகளைப் பாய்ச்சினோம். அவை யாவும் கீழே சென்று அடி மட்ட நீரில்ச் சேர்ந்து கடைசியாக நாம் அருந்தும் நீரையே மாசுபடுத்துகின்றன. நோய்களுக்கு நாம் சிகிற்சைகள் தேடும் அதே வேளையில் நாம் இதுகாறும் இழைத்த பிழைகளை இனியும் இயற்றாது இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு வாழ்க்கை நிலையை அனுசரிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை மறக்க வேண்டாம்.

2011 ஆண்டில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆகும். இவர்களில் 34 பேர் இந்நோயினால் மரணத்தை தழுவியுள்ளனர். 2012 இல் 425 ஆகவும், 2013இல் 430 ஆகவுள்ள பாதிக்கப்பட்டவர்களின் தொகை இந்த ஆண்டின் 3ஆம் காலாண்டில் 443ஐ தாண்டியுள்ளது. எனவே எமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படப் போகும் நோயாளிகளின் தொகை மீண்டும் உயரக் கூடும் என்பதை எம் மக்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

நாம் உங்களுக்குச் சிகிச்சையை வழங்கும் அதே நேரத்தில் மக்களாகிய நீங்கள் நோயில் இருந்த விடுபடக் கூடிய வகைகளையுந் தெரிந்து வைத்து முன்னேற முன்வர வேண்டும்.

எமது வடமாகாணம் இதுகாறும் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக் கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் திரை மறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில் எம்மக்கள் வாழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது.

நீரிலே எண்ணெய். நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருட் பாவனையில் ஏற்றம் – இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்பதை என்னால் ஏற்க முடியாது இருக்கிறது.

மக்கள் தங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். எமது வருங்காலச் சந்ததியினர் சுகத்தோடு வாழ நாம் இன்றே சுற்றுச் சூழல் மாசுக்களைத் தவிர்க்க வேண்டும். தகாத வாழ் முறைகளைத் தடை செய்ய வேண்டும். அதற்கு உங்கள் யாவரதும் ஒத்துழைப்பு அவசியம்.- என்றார்.

Related Posts