பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாவிட்டால் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும்

பிள்ளைகள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லையென்றால் அது தொடர்பில் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதர் தெரிவித்தார்

தமிழ் சிவில் சமூகத்தின் கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (19) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில். பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்திலும் பாடசாலை முடிவடையும் நேரத்திலும் கனரக வாகனங்கள் பாடசாலைக்கு அருகில் செல்வதை பொலிஸார் தடுக்க வேண்டும்.

காலையில் பேருந்து தரிப்பிடங்களில் மதுபானப் போத்தல்கள், பியர் ரின்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இரவில் பொது இடங்களில் இருந்து மதுபானம் அருந்துபவர்கள் அதிகரித்துள்ளனர்.

தரிப்பிடங்கள் தவிர்ந்து வேறு இடங்களில் அநாவசியமாக வாகனங்கள் தரித்து நிற்பதை பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த சிறுவர் நன்னடத்தை அதிகாரியொருவர்,

யாழ். மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. பாடசாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று நாங்கள் விசாரிக்கச் சென்றால் ஒரு கட்டத்துக்கு மேல் பொலிஸாரை அழைக்க வேண்டிய நிலை ஏற்படும். இருந்தும் அதற்கு பாடசாலை அதிபர் விரும்புகின்றார்கள் இல்லை.

பாடசாலைக்கு அருகில் பாக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது. 21 வயதுக்குறைந்தவர்களுக்கு பாக்குகளை விற்பனை செய்வதில்லையெனக் கூறிவிட்டு பாக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கு பொலிஸார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Posts