இன்று வரும் சினிமாப்படங்கள் கத்திச்சண்டை போன்ற பெயர்களில் எல்லாம் வருகின்றன. இதை பார்க்கும் பிள்ளைகள் நத்தாருக்குக் கூட கத்தி பொல்லுடன் சண்டைக்குத் தான் செல்வார்கள். இப்படியான உலகத்தில் வாழும் பெற்றோர்கள், உங்களுடைய பிள்ளைகளை இரக்கம் உடையவர்களாக வளர்க்க வேண்டும். இல்லையேல் நாங்கள் அழிவோம். இவ்வாறு யாழ்.மறைமாவட்ட பேராயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுக் கொண்டார்.
யாழ்.மரியன்னை பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடம்பெற்ற கிறிஸ்து பிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்போது வரும் சினிமாப் படங்களின் பெயர்களைப் பார்த்தால் கத்திச்சண்டை போன்ற பெயர்களில் வருகின்றன. அந்த நாள்களில் நாங்கள் பார்த்த படங்களின் பெயர்களைப் பார்த்தால் பாசமலர், குடும்பம் என்று இருந்தன. இப்போது வரும் படங்களை பிள்ளைகள் பார்த்தால் நத்தாருக்குக் கூட கத்தி பொல்லுடன் சண்டைக்குத் தான் செல்வான். இப்படியான உலகத்தில் வாழும் நீங்கள் உங்களுடைய பிள்ளைகளை இரக்கமுடையவர்களாக வளர்க்க வேண்டும். இல்லையேல் நாங்கள் அழிவோம் என்றார்.