இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் அரிசி மற்றும் முட்டை சந்தையில் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை என்று சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இணையத் தளத்தில் வெளிவரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் கேட்ட போது இந்த பிரிவின் சிரேஷ்டஅதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, துறைமுகப் பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
உணவுக்கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் நான்கு பேர் இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகளை பரிசோதனை செய்கின்றனர். துறைமுகத்தில் உள்ள விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் மூலம் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்கமைவாக நுகர்வோருக்கு பொருத்தமற்ற எந்த உணவுப் பொருட்களும் நாட்டிற்குள் வருவதற்கு இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கால்நடை வளத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு அமையவே முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தத் திணைக்களத்தின் அதிகாரிகளும் துறைமுக மற்றும் விமான நிலைய வளவில் பணியாற்றுகின்றனர். 2014ம் ஆண்டிலிருந்து இதுவரையில் எந்தவொரு நாட்டிலிருந்தும் முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் மேலும் குறிப்பிட்டார்.