பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைவாக, யாவரும் சுயமாக விரும்பி ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என எதிர்க கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் மீயுயர் சட்டத்தின் அடிப்படையிலும், அதன் மக்களுடைய சுயவிருப்பத்துடனும், சம்மதத்துடனும் இலங்கை ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாததா நாடாக தொடர்ந்தும் இருக்கும் என கூறினார்.
இலங்கையில் இதுவரை கட்டமைக்கப்பட்ட அரசியலமைப்புக்கள் எதுவும் அதன் வேறுபட்ட மக்களின், குறிப்பாக தமிழ் மக்களின் இருதரப்பு ஒருங்கிசைவைப் பெற்றிருக்கவில்லை எனவும் அல்லது இரு பிரதான கட்சிகளின் மற்றும் ஏனைய அரசியற் கட்சிகளின் இருதரப்பு ஒருங்சிசைவையும் பெற்றிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்தகைய நியாயமான ஒருங்கிசைவின் அடிப்படையிலான அரசியலமைப்பு ஒன்றே நாட்டின் அடிப்படையான மீயுயர் சட்டமாக நாட்டின் அரசியலமைப்புக்கு அவசியமாகத் தேவையாகவுள்ள சட்டரீதியான அந்தஸ்தையும் நம்பகத்தன்மையையும் பெற்றுத்தரும் எனவும் கூறினார்.
தமது அடையாளமும், கௌரவமும் அங்கீகரிக்கப்படும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமான அரசியலமைப்பு ஏற்பாடுகளே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அபிலாசையாக இருந்து வருவதாக சம்பந்தன் கூறினார்.
பாதுகாப்புச் செலவினங்களுக்காக பாரிய தொகையைச் செலவிட வேண்டியுள்ளதால் முக்கியமான துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வளப் பற்றாக்குறை தடையாக உள்ளமை பின்னடைவுக்குக் காரணம் என தெரிவித்த அவர், இந்தப் புனிதமான பணியை வெற்றிகரமாகப் பூரணப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.