பிலிப் ஹியூஸின் மரணம்: வேண்டுமென்றே பவுண்சர்கள் வீசப்பட்டனவா?

தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, நியூ சௌத் வேல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷோன் அபொட் வீசிய பந்து, தலையில் தாக்கி உயிரிழந்த துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பான, மருத்துவ இறப்பு ஆய்வறிக்கைக்கான விசாரணைகள் நேற்று ஆரம்பித்தன.

Philip-Hughes

2014ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி தலையில் பந்தால் தாக்கப்பட்ட ஹியூஸ், 27ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

முதல் நாள் விசாரணைகளில், நியூ சௌத் வேல்ஸ் அணியின் அப்போதைய தலைவர் பிரட் ஹடின், துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், வேகப்பந்து வீச்சாளர் டக் பொலிஞ்சர், ஹியூஸின் குடும்பத்தினர் ஆகியோர் வாக்குமூலமளித்தனர்.

ஹியூஸ் மீது வேண்டுமென்றே பவுண்சர் பந்துகள் வீசப்பட்டதா எனவும் அவர் மீது பயமுறுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதா எனவும் ஆராயப்பட்டது.

குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டப் பிரதிநிதியான கிரெக் மெலிக், ஹியூஸ் மீது பந்து தாக்குவதற்கு முன்பாக, “நான் உங்களைக் கொல்லப் போகிறேன்” என, டக் பொலிஞ்சர் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், அதை மறுத்த பொலிஞ்சர், “நான் அதைச் சொல்லவில்லை என்பதை எனது இதயத்தின்படி நானறிவேன்” என்றார். அவர் அவ்வாறு சொல்லும் போது, ஹியூஸின் பெற்றோர்கள், தங்கள் தலைகளை ஆட்டியபடி இருந்தனர்.

அந்த நாளில், ஹியூஸ் மீது வேண்டுமென்றே பவுண்சர் பந்துகள் வீசப்பட்டனவா என்று, ஹடினிடம் கேட்கப்பட்டது. குறிப்பாக, அவரது களத்தடுப்பு வியூகங்கள், அவ்வாறு காணப்பட்டதாகக் கருதியே கேட்கப்பட்டது.

எனினும், அதை மறுத்த ஹடின், ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கே அவ்வாறான களத்தடுப்பு வியூகத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிவித்ததோடு, பவுண்சர் பந்துகளை வீசுவதாக இருந்தால், அடுத்த முனையில் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லையனைப் பந்துவீசுமாறு வைத்திருக்க மாட்டார் எனக் குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து, இதற்கு முன்னர் டேவிட் வோணர் தெரிவித்த கருத்தோடு முரண்படுவது போன்று காணப்பட்டது. இந்தப் போட்டிக்காக என அவர் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும், பவுண்சர் பந்துகளை வீசுவது போன்ற திட்டம் காணப்படுவதாக, அவர் குறிப்பிட்டார். எனினும், நேரடியான வார்த்தைகளால் அவற்றை அவர் தெரிவித்திருக்கவில்லை.

இந்த விசாரணைகளின் ஆரம்பத்தில், ஹியூஸின் மரணம் நிகழ்ந்த காலக்கோடு குறித்து விளக்கப்பட்டது.

இதன்போது, ஹியூஸுக்குத் தலையில் ஏற்பட்ட அடியால், அவருக்கு மரணம் ஏற்படுவதைத் தடுத்திருக்க முடியாது என, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Related Posts