பிலிப் ஹியூக்ஸின் நிறைவேறாத ஆசை

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணை வைக்க வேண்டும் என்பதே பிலிப் ஹியூக்ஸின் ஆசையாக இருந்துள்ளது.

Phillip-Hughes1

ஆவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேக்- இத்தாலியைச் சேர்ந்த விர்ஜினியா தம்பதியின் மகனாக 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம்திகதி அவுஸ்திரேலியாவின் மாக்ஸ்வில்லே என்ற சிறிய நகரத்தில் பிறந்தார்.

பிலிப் ஹியூக்ஸின் தந்தை கிரேக் அவுஸ்திரேலியாவில் வாழைத்தோட்டம் வைத்து வாழைப்பழ உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.

தனது தந்தையின் வாழைத் தோட்டத்திற்கு ஹியூக்ஸ் அடிக்கடி செல்வார். அப்போதெல்லாம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணையும் வைக்க ஆசைப்படுவதாகவும், அதுவே தனது கனவு என்றும் கூறுவார். ஆனால் விதி அவரது வாழ்க்கையில் வேறு விதமாக விளையாடி விட்டது.

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி திறமையை வளர்த்த பிலிப் ஹியூக்ஸ் 5 ஆண்டுக்கு முன்பு அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜோகன்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற டெஸ்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அவர் அவுஸ்திரேலிய அணிக்காக பங்கேற்ற 408 ஆவது டெஸ்ட் வீரர் ஆவார். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 4 ஆவது பந்தில் டக்-அவுட் ஆன ஹியூக்ஸ் 2ஆவது இன்னிங்சில் 75 ஓட்டங்களை எடுத்தார்.

இதைத் தொடர்ந்து டேர்பனில் இடம்பெற்ற 2ஆவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் (115 ,160 ) சதம் விளாசி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
அப்போது அவரது வயது 20 ஆண்டு 96 நாட்கள். டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இளம் வீரர் என்ற புதிய உலக சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

ஆனாலும் அவரால் அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அணியில் இடம் பிடிப்பதும், வெளியேற்றப்படுவதுமாக இருந்தார்.

கடந்த மாதம் 12 ஆம் திகதி டுபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதே அவர் விளையாடிய இறுதி சர்வதேச போட்டி. அதில் அவர் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பிலிப் ஹியூக்ஸ் இதுவரை 26 டெஸ்டில் விளையாடி 3 சதம், 7 அரைச்சதம் உட்பட 1,535 ஓட்டங்களையும் (சராசரி 32.65), 25 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம், 4 அரைசதத்துடன் 826 ஓட்டங்களையும் (சராசரி 35.91 ), 20 ஓவர் போட்டியில் ஒன்றில் பங்கேற்று 6 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். இதே போல் முதல்தர கிரிக்கெட் போட்டியில் 114 போட்டிகளில் 26 சதத்துடன் 9,023 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஹியூக்ஸ் எப்போதும் பவுன்சர் எனப்படும் எகிறும் பந்துகளை சமாளிப்பதில் தடுமாறுவது உண்டு. தொடர்ந்து பவுன்சர் பந்து வீச்சுக்கு திணறியதால் ஒரு முறை ஆஷஸ் தொடரில் இருந்தும் கழற்றி விடப்பட்டார். இறுதியில் அப்படிப்பட்ட ஒரு பவுன்சர் பந்தே அவரது உயிரைக் குடித்து விட்டது.

Related Posts