பிலிப்பைன்ஸை புதன்கிழமை தாக்கிய ரம்மசுன் சூறாவளியில் சிக்கிக் குறைந்தது 13 பேர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த சூறாவளியால் தலைநகரிலும் அந்நகருக்கு நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தொலைவிலுள்ள மீன்பிடிக் கிராமங்களிலுமுள்ள வீடுகளின் கூரைகள் கடும் சேதத்துக்குள்ளானதுடன் மரங்களும் சரிந்து விழுந்துள்ளன.
தலைநகரில் சூறாவளியால் வாகனங்கள் பலவும் புரட்டப்பட்டுள்ளன. மேற்படி சூறாவளி பிரதான தீவான லுஸனை மணிக்கு 185 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளது.
இந்த சூறாவளியையடுத்து பிராந்தியத்திலுள்ள அரசாங்க அலுவலகங்களும் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
‘கிளென்டா’ என செல்லமாக அழைக்கப்படும் இந்தச் சூறாவளி காரணமாக 370,000 பேருக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேற்படி சூறாவளி முதன்முதலாக தாக்கிய கிழக்கு அல்பே மாகாணத்திலிருந்தே அதிகளவானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மணிலா விரிகுடாவில் சேரிப் பிரதேசங்களிலுள்ள வீடுகள் இந்த சூறாவளியால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பெடான்கஸ் நகரில் சூறாவளியால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு தேசிய செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.