பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாதவர்களும் விசேட அனுமதி மூலம் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சை கோரும் பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது. இதன்போது, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்தப் பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
பிரேரணையை முன்வைத்து ரவிகரன் உரையாற்றுகையில், “ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை, வடமாகாணத்தை சேர்ந்த 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் இல்லை. இவர்களில் பலர் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமில்லாமையால் அடையாள அட்டையை பெறமுடியாத நிலையில் உள்ளனர்.
யுத்தத்தால் பிறப்புபதிவு புத்தகங்கள் அழிவடைந்தமை, பிறப்பு பதிவை மேற்கொள்ளமை, வட மாகாணத்திலுள்ள மலையக மக்களுக்கு பிறப்பு பதிவுகள் இல்லாமை போன்ற காரணங்கள் காணப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் பெற்ற அடையாள அட்டைகளின் இலக்கங்கள் அழிவடைந்தமையால் புதிய அடையாள அட்டையை பெறமுடியவில்லை. இவ்வாறானவர்கள் நடமாடும் சேவைகள் மூலம் பிறப்பு பதிவு பத்திரத்தை பெறமுடியாதுள்ளது.
எனவே விசேட அனுமதி மூலம் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற இந்தப் பிரேரணையை சபையில் முன்வைக்கின்றேன் என்றார். இந்தப் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.