பிறந்தநாளுக்கு 4 கிலோ கிராம் தங்கச் சட்டை

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45அவது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் (இந்திய ரூபாய்) மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார்.

மும்பையில் இருந்து 260 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது இயோலா நகரம். அந்த நகரைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் பங்கஜ் பாரக். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர், சிறுவயதிலேயே ஜவுளித் தொழிலில் இறங்கி மிகக் குறுகிய காலத்தில் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார்.

golad-shirt

பள்ளிப் பருவம் முதலே அவருக்கு தங்கத்தின் மீது தணியாத ஆசை. அதனால் எப்போதுமே சுமார் இரண்டு கிலோ அளவுக்கு தங்க நகைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தனது 45ஆவது பிறந்தநாளை இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடுகிறார். இதற்காக அவர் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்க சட்டையை வாங்கியுள்ளார்.

சுமார் 20 பொற்கொல்லர்களின் கைவண்ணத்தில் 3,200 மணி நேர உழைப்பில் இந்த தங்க சட்டை உருவாகியுள்ளது. இதன் மொத்த எடை 4 கிலோ கிராம் ஆகும்.

golad-shirt-2

இதுகுறித்து தொழிலதிபர் பங்கஜ் பாரக் கூறியதாவது:

18 முதல் 22 கேரட் தங்கத்தில் சட்டை தைக்கப்பட்டுள்ளது. இதனை வழக்கமான சட்டை போன்று அணியலாம். சட்டையை துவைத்து உலர வைக்கலாம். ஒருவேளை சட்டை கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ சரிசெய்து கொடுக்க அதனை தயாரித்த ஜூவல்லரி நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

golad-shirt-3

புதிய சட்டை வாங்கியவுடன் அதை அணிந்து கொண்டு மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பங்கஜ் பாரக் வழிபட்டார். அப்போது அனைவரின் பார்வையும் அவர் மீது பதிந்தது. அவரைப் பார்க்க மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.

கடந்த ஆண்டு புணேவைச் சேர்ந்த தத்தா புகே என்பவர் ரூ.1 கோடியே 27 லட்சம் (இந்திய ரூபாய்) செலவில் தங்க சட்டை வாங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த சாதனையை பங்கஜ் பாரக் இப்போது முறியடித்துள்ளார். அவரின் சாதனை கின்னஸ், லிம்கா சாதனை புத்தகங்களிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Posts