பிரேஸில் சிறைச்சாலை கலவரம்: 60 பேர் கொடூரமாகக் கொலை!

பிரேஸிலின் அமேசான் மாநிலத்தின் தலைநகர் மனவுஸ் நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் தலைத்துண்டிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் சுமார் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கும்பல்களிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த கலவரமானது சுமார் 17 மணிநேரங்களாக தொடர்ந்ததாக அமேசான் மாநில செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது கலகக்காரர்கள் 12 சிறைச்சாலை காவலர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். குறித்த கலவரத்தின் போது பலர் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், தப்பிச் சென்றுள்ளோர் எண்ணிக்கை உறுதிசெய்யப்படவில்லை.

பிரேசில் நாட்டில் சிறைச்சாலை கலவரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற போதிலும், இந்த கலவரமானது சிறைத்துறை வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான படுகொலை என அமேசான் மாநிலத்தின் பொது பாதுகாப்பு தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த 1992ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் 111 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts