ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர், இன்று சனிக்கிழமை காலை மரணமடைந்தார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
1972ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி, பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார்.
பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரையிலும் பயின்றார். அத்துடன் கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவௌ மகா வித்தியாலயம் ஆகியவற்றியில் உயர் தரம் பயின்றுள்ளார்.
பொலன்னறுவை ரஜரட்ட பில்டர்ஸ் மற்றும் சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட ஹால் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளராவார்.
வர்த்ததுறையில் பேசப்படும் ஒருவரான இவர், சமூக சேவையாளர் மட்டுமன்றி ஒரு கொடையாளியாவர்.