பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைத்த தர்மதுரை: திருநங்கை ஜீவா உருக்கம்

‘தர்மதுரை’ திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப் பெற்றவர் திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா. இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது பற்றி மீடியாக்களிடம் மனம் திறந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறும்போது, என் சொந்த ஊர் சிவகாசி, நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன்.

tharmathurai

கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன். சில சினிமா கம்பெனிகளில் உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். எப்படி போட்டோ கொடுப்பது என தெரியாமல் பாஸ்போர்ட் போட்டோக்களை கொடுத்து இருக்கிறேன்.

வடபழனியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்துக்கொண்டே நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் புதிய பூமி எனும் நடனப்பள்ளியில் நடனம் கற்றுகொண்டேன். நடனம் என் சிறுவயது கனவு. பின்பு நிறைய இடங்களில் மேடை நடன கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் நிறைய பேரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானேன்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக பிரபல நடிகைகள் அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தேன். அப்பொழுது ‘தர்மதுரை’ படத்திற்கு விசாலினி அவர்களுக்கு ஒப்பனை கலைஞராக பணியாற்ற சென்றிருந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் என்னை அழைத்து நடிக்க வைத்தார்.

என் அண்ணணாகவே மாறி விஜய்சேதுபதி அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார். இன்று படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த தீபாவளி வந்தால் என் பெற்றோர்களை பிரிந்து 10 வருடங்கள் ஆகிறது. ஊரில் படம் பார்த்துவிட்டு என் பெற்றோர், அண்ணன் ஆகியோர் என்னை அழைத்து பேசினர். எனக்கு கண்ணீர் வந்து விட்டது.

இந்த படத்தில் நடித்ததின் மூலம் பிரிந்து இருந்த என் குடும்பத்தினருடன் நான் சேர்ந்துவிட்டேன். மேலும் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தீவிரமாய் நடித்து வருகிறேன். என்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படியொரு கௌரவமான பாத்திரத்தில் நடிக்க வைத்த அண்ணன் இயக்குனர் சீனுராமசாமி அவர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts