ஸ்ரீலங்காவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கிவரும் கூட்டு எதிர்கட்சியினர் முதல்முறையாக நிழல் அமைச்சவையொன்றை உருவாக்கியுள்ளனர்.
இதன்பிரகாரம் மஹிந்த ராஜபக்ச நிழல் பிரதமராகவும் தேசிய பாதுகாப்பு சிறப்புரிமைகள் மற்றும் மத விவகார அமைச்சராகவும் பெயரிடப்பட்டுள்ளார்.
பந்துல குணவர்தன நிழல் நிதி அமைச்சராகவும் நாமல் ராஜபக்ச நிழல் வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விமல் வீரவங்ச, வீடமைப்பு மற்றும் கட்டுமாணத்துறை நிழல் அமைச்சராக பெயரிடப்பட்டுள்ளார்.
விமான சேவைகள் மற்றும் போக்குவரத்துதுறை நிழல் அமைச்சராக சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நிழல் துறைமுக அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும கல்வி அமைச்சராகவும் பெயரிடப்பட்டுள்ளளனர்.
இதேவேளை கூட்டு எதிர்கட்சியினர் நியமித்துள்ள நிழல் அமைச்சரவை நாடாளுமன்ற வளாகத்தில் முதல்முறையாக நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
அந்தந்த அமைச்சுப் பதவிக்கு பொறுப்பானவர்கள் தமது எதிர்கால கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து இந்த சந்திப்பில் விளக்கமளிப்பார்கள் என கூட்டு எதிர்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
தற்போதைய அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பும் நிழல் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களுக்குள் ஏதேனும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெறுகின்றதா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் பணிகளையும் நிழல் அமைச்சர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா கூறியுள்ளார்.
ஏனைய நாடுகளைப் போன்று 50 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற நடைமுறையை அறிமுகப்படுத்துவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.