பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றில் 5 பேரை ஆயுதம் தாங்கிய இருவர் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸின் வடக்கு நோர்மன்டி பகுதியில் தேவாலயம் ஒன்றுக்குள் ஆயுதம் தாங்கிய 2 பேர் திடீரென நுழைந்தனர். அங்கிருந்த பாதிரியார், 2 கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 5 பேரை ஆயுத முனையில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தேவாலயம் அருகே துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிணைக் கைதிகள் 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ஆயுதம் தாங்கிய நபர்களை போலீஸ் சுட்டுக் கொன்றதா? அல்லது உயிருடன் கைது செய்ததா? என தெரியவில்லை எனவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 130 பேர் பலியாகி இருந்தனர். இதனையடுத்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் நைஸ் நகரில் பிரான்ஸின் தேசிய தினத்தன்று வெடிபொருட்களுடனான லாரியை ஓட்டி வந்த தீவிரவாதி ஒருவன் மக்கள் மீது வெறித்தனமாக மோதினான். இதில் 84 பேர் பலியாகினர். இதனால் அவசர நிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரான்ஸ் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்துவோம் என ஐஎஸ் இயக்கம் மிரட்டல் விடுத்திருந்தது. நைஸ் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ் இயக்கத்துக்கு எதிரான போரை தீவிரப்படுத்துவோம் எனவும் பிரான்ஸ் பதிலடி கொடுத்திருந்தது.
இப்பின்னணியில் இன்று பிரான்ஸில் மீண்டும் தேவாலயத்தில் 5 பேரை பிணைக் கைதிகளாக பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திலும் ஐஎஸ் தீவிரவாதிகளே ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய சம்பவங்கள் பிரான்ஸ் மக்களை தொடர்ந்து அதிர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருக்கிறது.