ஆக்கபூர்வமாகவும் விசுவாசமான முறையிலும் அரசியல் தீர்வு கிடைக்குமாயின் நாம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம். அதேசமயம் பிரயோசனமற்ற விசுவாசமற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்றவும் மாட்டோம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
‘நாங்கள் எவருடனும் மோத விரும்பவில்லை. மாறாக எல்லோருடனும் ஒத்துழைப்புடன் செயற்படவே விரும்புகின்றோம்’ என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு யாழ். வீரசங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
‘ஆட்சி நடத்துவதற்கு ஜனநாயகம் அத்திவாரமாக இருப்பது உண்மையானால் வடமாகாண சபை தேர்தலில் வடமாகாண மக்கள் அளித்த தீர்ப்புக்கள் மதிக்கப்பட வேண்டும். வடமாகாண சபை தேர்தலுக்காக எமது மக்கள் கடுமையாக உழைத்ததை எப்போதும் நாம் மறக்க முடியாது என்பதுடன் அவர்களின் தேவைகளை தெளிவாகப் புரிந்து கடமையாற்ற வேண்டியது வடமாகாண சபையின் பொறுப்பாகும்.
வடமாகாண சபை தற்போதுள்ள அரசியல் சாசனத்திலுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த அதிகாரத்தின் ஊடாக மக்களுக்கு பல சேவைகளை ஆற்ற வேண்டும். வடமாகாண சபை மூலம் மக்கள் தமக்கு போதியளவு இறைமை கிடைக்கும் என காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள்.
உலக நாடுகள் வடமாகாண சபைக்கு உதவ முன்வருவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் எமக்கில்லை. இந்நாட்டில் நீதியானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஏற்பட்டு, எமது மக்கள் இந்நாட்டில் சம உரிமையுடன் பாதுகாப்பாக வாழ வேண்டும்.
தமிழ் மக்கள் தமது தனித்துவம், மொழி, கலாசார அடிப்படையில் விசுவாசமான சுயாட்சியைப் பெற்று அரசியல், சமூக, பொருளாதார, கலாசார ரீதியான அபிலாஇஷகள் நிறைவு செய்துகொள்ள இம்மாகாண சபை உறுதுணையாக இருக்க வேண்டும்.
நாட்டில் காணப்படும் அனைத்து மக்களினதும் அபிலாஷைகள் நாட்டிற்கு குந்தகம் ஏற்படாத விதத்தில் நிறைவேற்றப்படுவதற்கான ஆட்சி ஒழுங்கு இந்நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாங்கள் நாட்டிற்குள் அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கு எப்போதும் ஒற்றுமையாகவும், ஜக்கியமாகவும் இருந்தும் இதுவரையில் அரசியல் தீர்வு ஏற்படவில்லை என்றால் அதற்கு காரணம் இலங்கை அரசு அரசியல் தீர்வினை எடுப்பதற்கு ஆக்கபூர்வமாக செயற்படவில்லை என்பதேயாகும்.
அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு 30 வருட யுத்தம் தடையாக இருந்தது என்று கூறினால், தற்போது யுத்தம் நிறைவடைந்த பின்னர் கூட தீர்வினை முன் வைக்காமல் இலங்கை அரசு பிற்போக்குத் தனமாகவே இருந்து வருகின்றது.
இலங்கை அரசு ஆக்கபூர்வமான தீர்வினை முன்வைக்காத காரணத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கை அரசு சர்வதேச சமூகத்திற்கு பல வாக்குறுதிகளை கொடுத்ததுடன், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தட்டிக்களித்ததினைப் போல சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளையும் தட்டிக்கழிக்க முடியாது. அவ்வாறு செய்ய முயன்றால் பாரிய விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும். இந்நிலையில் தான் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது.
இந்நாட்டில் தமிழ் மக்கள் சுயாட்சியைப் பெற்று அதன் மூலம் அனைவருக்கும் கிடைக்கின்ற சமமான அந்தஸ்த்துடன் வாழ்வதற்கும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குமான பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்தது. இருந்தும் இந்த பிரேரணைக்கு அரசு பதிலளிக்கவில்லை.
ஆக்கபூர்வமாகவும் விசுவாசமான முறையிலும் அரசியல் தீர்வு கிடைக்குமாயின் நாம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம். அதேசமயம் பிரயோசனமற்ற விசுவாசமற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்றவும் மாட்டோம்.
பெரும்பான்மையினர் ஏதாவதொரு அரங்கிற்கு எம்மை அழைத்து அதன் மூலம் தாங்கள் விரும்பியதை எம் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு நினைக்கின்றார்கள். அவ்வாறான அரங்கிற்கு நாங்கள் செல்ல மாட்டோம். தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்பதுடன் சிங்கள மக்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை.
எம்மில் பலர் பதவியேற்பு நிகழ்வுக்கு வராதது எனக்கு மனவருத்தத்தினைத் தருகின்றது. மக்கள் ஒப்படைத்த பொறுப்பை நாம் ஒற்றுமையுடன் செயற்படுத்த வேண்டும். அத்துடன் கூட்டமைப்பின் ஒற்றுமையை குழப்புவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
நாங்கள் எவரையும் புறந்தள்ளவில்லை என்பதுடன், இயன்றளவிற்கு அனைத்துக் கட்சிகளையும் அமைச்சுப் பதவிக்கு உள்வாங்கியுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
நாங்கள் ஒற்றுமையுடன் தமிழ் மக்களின் கரங்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களையும் பலப்படுத்த வேண்டிய கட்டாயமுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.