பிரமிட் வர்த்தக முறைமை: யாழில் திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை!

மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட வர்த்தக முறைமையான பிரமிட் வர்த்தக முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன் யாழில் திறக்கப்பட்டு உள்ள அலுவலகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி யாழ்.உதவி காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குறித்த வர்த்தக நடவடிக்கைக்காக யாழ் நகரில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பில் ‘ காவல்துறை மா அதிபரிடம் சொல்லுங்கள்’ எனும் திட்டத்தின் ஊடாக யாழில் வசிக்கும் நபர் ஒருவர் காவல்துறைமா அதிபரின் கவனத்திற்கு அந்த விடயத்தை கொண்டு சென்றார்.

அதனை அடுத்து காவல்துறைமா மா அதிபர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ். காவல்துறை அத்தியட்சகருக்கு பணித்ததன் பிரகாரம் காவல்துறைமா அதிபருக்கு முறைப்பாடு செய்த நபரை அழைத்து , பொதுமக்களின் நலன் கருதி முறைப்பாட்டை பதிவு செய்தால் தாம் மோசடி வழக்காக அதனை எடுத்து விசாரிக்க முடியும் என காவல்துறை அத்தியட்சகர் கோரியதை அடுத்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதேவேளை குறித்த நிறுவனம் தனது அலுவலகத்தை சாவகச்சேரி பகுதியில் திறந்து நடாத்தி வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி அப்போதைய சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் குறித்த நிறுவனம் இயங்குவதற்கு தடை விதித்திருந்தார். அவ்வாறு தடை விதிக்கப்பட்டதனையடுத்து சாவகச்சேரியில் இயங்கிய கிளை மூடப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts