பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடிகள் அதிகரிப்பு!! கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

யாழில் தொடர்சியாக அதிகரித்து வரும் பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியொன்று யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மோசடியில் குடாநாட்டைச் சேர்ந்த பலர் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கின்ற அதேவேளை, மேலும் பலர் நாள்தோறும் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.

குடாநாட்டிலுள்ள பிரபல மண்டபங்களிலும் ஹொட்டல்களிலும் கூட்டங்கள் நடத்தி இதற்குள் மக்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கே நுழைவுக் கட்டணமாக 250 ரூபா அறவிடப்படுகின்றது.

குறிப்பாக தென்னிலங்கையைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் நிதிசார் பிரமிட் கட்டமைப்பில் இணைகின்ற ஒருவர் சுமார் ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம் (140,000) ரூபாவைச் செலுத்தவேண்டும். இவ்வாறு செலுத்தியவுடன் அவருக்கு வெறும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான சோலர் அல்லது அதற்கு இணையான மின் உபகரணம் ஒன்று வழங்கப்படும்.

இதன் பின்னர் இணைந்த அந்த நபர் மேலும் இரண்டு பேரை அதற்குள் இணைக்கவேண்டும். பின்னர் அந்த இருவரும் ஆளுக்கு இருவரை இணைக்கவேண்டும். இவ்வாறு இணைகின்ற ஒவ்வொருவரும் குறித்த நிதிக் கம்பனிக்கு 140,000 ரூபாவைச் செலுத்தவேண்டும். இப்படியே இணைத்துக்கொண்டு செல்லும்போது அது பிரமிட் போன்று வளர்ந்து செல்லும்.

குறித்த நிதிக் கம்பனியின் இந்த செயற்றிட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்திருக்கின்றனர். கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை இந்த திட்டத்தில் இணைத்து அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றனர்.

இதில் பிரதானமாக இருக்கின்ற ஒருசில நபர்களுக்கு லட்சக்கணக்கான பணம் கிடைக்கும். ஆனால், ஏனையோர் ஏமாற்றமடைவதை தடுக்க முடியாமல்போகும். தங்கள் சுகபோகங்களுக்காக அவர்கள் மற்றவர்களை இந்த திட்டத்திற்குள் மாட்டிவிடுகின்றனர். இந்த உண்மை தெரியாமல் பல பொதுமக்கள் வங்கிகளில் கடன் பெற்று இந்த திட்டத்தில் இணைந்து வருகின்றமை வேதனைக்குரியது.

அத்துடன் மத்திய வங்கியால் இந்த நடவடிக்கை தொடர்பாக பொலிஸாருக்கு செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொலிஸார் உரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இது தொடர்பாக மக்கள் அறிவித்திருந்த போதும் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் எந்தவிதமான விளிப்புணர்வு செயற்பாடுகளையும் செய்வதாக தெரியவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளன.

Related Posts