பிரமிட்முறை வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு இடைக்காலத்தடை!

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட போதே நீதிபதி இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்தார்.

மேலும் குறித்த நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கையால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க மக்கள் மத்தியில் குறித்த நிறுவனம் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக இந்த நீதிமன்ற நியாயதிக்கத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் பிரதேச செயலர் முன்னிலையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது முன்னெடுக்க நீதிபதி பணித்தார்.

அத்துடன் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு குறித்த நிறுவனத்தின் பதிவுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் பணித்தார்.

மேலும் இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனருக்கு அறிவித்து நிறுவனம் தொடர்பிலான நடவடிக்கைகளை உடனடியாக கண்காணித்து வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் அது தொடர்பிலான கடிதத்தினை நீதிமன்று பதிவாளர் காலதாமதமின்றி அனுப்பி வைக்குமாறும் பணித்தார்.

அத்துடன் இது தொடர்பில், வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் க்கு அறிவிக்குமாறு சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணித்தார்.

மேலும் மக்கள் இந்த வியாபர நடவடிக்கையால் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் முகமாக இந்த நீதிமன்ற கட்டளையை பத்திரிகைகளில் பொலிஸார் அறியக் கொடுத்து மக்கள் பாதிக்கப்படுவதை தடுத்து மக்களை அதில் இருந்து காப்பற்ற பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

அத்துடன் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள், கூட்டங்களை நடத்த ஒழுங்குகளை செய்து கொடுத்தவர்கள், மண்டபங்களை கொடுத்தவர்கள் ஆகியோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் தேவை ஏற்படின் அவர்களையும் இந்த வழக்கின் சந்தேக நபர்களாக இணைத்து கொள்ளுமாறும் பொலிசாருக்கு நீதிபதி பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts