யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருந்தாரா? அவர் உயிருடன் பிடிபட்டாரா என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தன.
இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டபோது அவர் தெரிவித்தவை வருமாறு:
யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே சர்வதேச தரப்பினர் அவதானித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்துகள் மேலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.
எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் இந்த விவகாரத்தை ஆராய்ந்து சரியான நடவடிக்கைகளை எடுக்கும். இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலும் வெள்ளைக்கொடி விவகாரத்திலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மூலமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஆனால் அவ்வாறான தேவை இப்போது அரசாங்கத்திற்கு இல்லை. இப்போதிருக்கும் நிலையில் நாம் உள்ளக விசாரணைகள் மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
இந்த விசாரணைகளில் இராணுவத்தை இலக்கு வைக்கும் நோக்கம் இல்லை. இந்த யுத்தத்தின்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். பொதுமக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் என்பதும் உண்மை.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை கண்டறியும் நடவடிக்கைகள் பலமாக முன்னெடுக்கப்படும். இப்போது சரத் பொன்சேகா பல இரகசிய தகல்களை கூறுகிறார். இப்போது அவரிடம் இருந்து உண்மைகளை அறியும் விசாரணையை ஆரம்பித்தல் மிகவும் சாதகமாக இருக்கும்.
இறுதி யுத்த சமயத்தில் பிரபாகரன் குறித்தும் ஆராய வேண்டியது அவசியம். அவர் யுத்தம் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தாரா? அவர் பிடிக்கப்பட்டு போர் விதிமுறைகளுக்கு முரணாக கொல்லப்பட்டாரா என்பது குறித்து உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் – என்றார்.