`இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
”இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டு வருவதை விட அந்தப் படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து நட்ட ஈட்டுத் தொகையினை பெற்றுத் தருவதே சிறந்ததாகும். அல்லது மத்திய அரசு அந்த தொகையினை மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.
இறைவனை வழிபடுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை மேற்கோள் இட்டுத்தான் சபரிமலைக்கு எல்லா வயதுடைய பெண்களும் செல்லலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் அங்கு மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்டப் போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கைத் தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார் பிரபாகரன்” என்றார்.