பிரபாகரன் கொல்லப்பட்டபோது யார் ஆட்சி?

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நேற்றய (21) அமர்வின் போது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பூர் மாவட்ட சட்டசபை உறுப்பினர் வெற்றிவேல், ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவ்வமைப்பின் உறுப்பினர்கள் கொல்லப்படும்போது, தமிழகத்தின் ஆட்சியில் இருந்தவர்கள் யார்?’ என்று கேள்வி எழுப்பியதை அடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான 2ஆம் நாள் விவாதம், நேற்று நடைபெற்றது. அதனைத் தொடங்கிவைத்து உரையாற்றும் போதே, மேற்படி சட்டசபை உறுப்பினர், கேள்வி எழுப்பினார். இதனாலேயே அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள வெற்றிவேல்,

’23ஆம் புலிகேசி போல சட்டசபை தேர்தலில் பிரசாரத்துக்குச் சென்றவர்களை, மக்கள் புறந்தள்ளி விட்டனர். பிரபாகரன், விடுதலைப் புலிகள் கொல்லப்படும் போது, யாருடைய ஆட்சி நடைபெற்றது, விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் திட்டம் தி.மு.க ஆட்சி காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது’ என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து, அவரது உரைக்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமளியிலும் ஈடுபட்டனர். அப்போது எழுந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், மீத்தேன் திட்டத்துக்கு தி.மு.க ஆட்சிக் காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே செய்துகொள்ளப்பட்டது என்றும் அதற்கு அ.தி.மு.க ஆட்சியில்தான் அனுமதி கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். அத்துடன், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில், இலங்கையின் பிரச்சினை எதற்கு? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அப்போது எழுந்த அவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் உரையில் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை முன்வைத்தார்.

Related Posts