பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை: ராஜித

வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கோருகின்ற நிலையில், இது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் எவ்வித தவறும் இல்லை. நமது நாட்டில் நிலவியது உள்நாட்டு யுத்தம். வடக்கில் உயிரிழந்தவர்களும், தெற்கில் உயிரிழந்தவர்களும் எமது பிள்ளைகளே.

ஜே.வி.பி.-யும் அக்காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே விளங்கியது. அவ்வாறாயின் அதுவும் ஒரு பயங்கரவாத அமைப்பே. அவர்களை நினைவுதினம் அனுஷ்டிக்க அனுமதிக்கும்போது புலிகளை நினைகூருவதில் என்ன தவறு?

புலிகள் எமக்கு பயங்கரவாதிகளாக தோன்றினாலும், வடக்கு மக்கள் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர். அவ்வாறானவர்கள் தமது உறவுகளை நினைவுகூருவதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்.

Related Posts