தனது தந்தை கொல்லப்பட்ட பின்னர், பாதுகாப்புச் சூழலே மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புதல்வருமான ராகுல் காந்தி, 2009ஆம் ஆண்டில் பிரபாகரன் இறந்ததைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அதன்போது தனக்கு இரண்டு விதமான உணர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அவரை ஏன் இப்படி அவமானப் படுத்துகிறார்களென்றும் அவரது குடும்பம் மற்றும் குழந்தைகளை நினைத்து வேதனை அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஏன் அவ்வாறு உணர்ந்தேனென்று புரியவில்லை. இது தொடர்பில், உடனே பிரியங்காவுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசினேன். அவர் நமது அப்பாவை கொன்றவர். அவர் இறந்ததற்காக, சந்தோஷப்பட வேண்டும். ஆனால், என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. ஏன் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை எனத் தெரியவில்லை என்றேன். நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேனென, பிரியங்கா என்னிடம் தெரிவித்தார்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக, தானும் தனது சகோதரி பிரியங்காவும், தங்கள் தந்தையைக் கொலை செய்தவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் மன வேதனையில் இருந்து தங்களால் மீள முடியவில்லை என்றும் ஆனால் தற்போது, அவர்களை முற்றிலுமாக மன்னித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, பல்வேறு தரப்பினரதும் கேள்விகளுக்குப் பதலளிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தன் தந்தையும் தானும் கொல்லப்படுவார்களென, தன் பாட்டி தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள ராகுல், தனது தந்தை கொல்லப்பட்ட பின்னர், பாதுகாப்புச் சூழலே மாறிவிட்டதாகக்
குறிப்பிட்டுள்ளார்.