தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்றவர்கள் வல்வெட்டித்துறையில் பிரபாகரனை மாவீரர் என சொல்கின்றார்கள். இவ்வாறான கூற்றுக்கள் கூட்டணித் தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலமாகியுள்ளதாக’ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சின்னதுத்துரை தவராஜா தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பழைய நூலகக் கட்டிடத்தில் நேற்றைய முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘மாகாணசபை அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு, மத்திய அரசாங்கத்தோடு இணங்கிச் செயலாற்றினால் வட மாகாணத்தில் வாழும் மக்களுக்கு சேவைகளைச் செய்யலாமே தவிர, எதிர்ப்பு அரசியல் நடத்திக் கொண்டு இராணுவத்தை மாகாணத்தை விட்டு வெளியேற்றுவோம் என்பதும் சர்வதேச நாடுகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு நிதிகளைப் பெறுவோம் என்பதும் இயலாத காரியம். அது மக்களை ஏமாற்றும் பொய் பிரச்சாரம்’ என்றும் அவர் கூறினார்.
‘எமது மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக உண்மைக்குப் புறம்பாக பொய்களைக் கூற முடியாது. எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் உங்களிடம் கூற முடியும். அதையே நாம் நடைமுறைச் சாத்தியமான அனுகுமுறை என்று காலங் காலமாக கூறி வருகின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவையும் உலக நாடுகளையும் தாஜா பண்ணுவதற்கு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாசுக்காக கூறிவிட்டு பின்னர் வல்வெட்டித்துறையில் பிரபாகரனை மாவீரன் என்கின்றனர்.
புலிகள் குறித்து அப்படியொரு கொள்கை நிலைப்பாடு இல்லாதபோதும், வல்வெட்டித்துறையில் மக்களின் வாக்குகளை சூறையாட இப்படித்தான் பேச வேண்டுமென பேசுகின்றனர்’ என்றும் அவர் கூறினார்.
‘எம்மால் இடத்துக்கு இடம் மாறுபட்டும், மக்களுக்கு மக்கள் மாறுபட்டும் பச்சோந்திகள் போல பேச முடியாது. நாம் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களை பேசத் தெரியாதவர்களில்லை. அவர்கள் உணர்ச்சியூட்டுவார்கள், நாமோ உணர்ச்சி உந்துதலில் நமது இனத்தின் உரிமைக்காக ஆயுதம் தூக்கியவர்கள்.
தமிழ் இனத்தின் இழப்புக்களுக்கும் தியாகங்களுக்கும் முன்னால் இவர்கள் நிற்க முடியாது. அவர்களின் பிள்ளைகளோ, உறவுகளோ, உரிமைப் போராட்டத்துக்கு தியாகங்களைச் செய்யவில்லை. ஆகையால் தமிழ் மக்களின் உரிமை பற்றியும், தன்மானம் பற்றியும் பேசுவதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை, அருகதையும் இல்லை.
இங்கே உணர்ச்சியூட்டுபவர்கள் தேவையில்லை, உண்மையாக மக்களுக்காக உழைப்பவர்களே வேண்டும், தமிழ் மக்களின் இருப்பையும், பாதுகாப்பையும் பாதுகாத்துக் கொண்டு அரசியல் தீர்வுக்கும், அபிவிருத்திக்கும் அர்ப்பணிப்போடு சேவை செய்பவர்களே இங்கே வேண்டும்.
வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை திறம்பட செயற்படுத்த வேண்டும். அதற்காக மத்தியிலிருக்கும் அரசுகளுடன், அடிமைத்தனமாக காலில் விழத் தேவையில்லை. வெற்றிகளை மக்களுக்குப் பெற்றுக்கொள்ள சாணக்கியமான இணக்கப்பாடு இருக்க வேண்டியது அவசியமாகும். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம், இணக்க அரசியல் வழிமுறையில் சாணக்கியமான அணுகுமுறையிலேயே செயற்பட்டு வருகின்றோம்.
நாம் மாகாண சபையை வெற்றி பெற்றால், அதை திறம்பட செயற்படுத்துவதற்கு எமக்கு அனுபவமும், அரசியல் உறவும் உள்ளது. ஆகவே இம்முறை வட மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் எமது கட்சி வேட்பாளர்களை அமோக வாக்குகளால் வெற்றி பெறச் செய்வார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன்’ என்றும் அவர் மேலும் கூறினார்.