பிரபாகரனுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் செயலையே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கொள்கின்றார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் வடக்கில் பழைய நிலைமைகளும் அதே சிந்தனையுமே மக்கள் மத்தியில் உள்ளது.
அவர்களின் மனங்களில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி எம்முடன் இணைத்துக்கொள்ள நாம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். விரைவில் அதற்கான பலன்களை எம்மால் எதிர்பார்க்க முடியும்.
எனினும் மக்களின் மனங்களை குழப்பி நாட்டில் தமிழ் மக்கள் தனித்து வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒருசில தமிழ் தலைமைகள் செயற்படுவது கண்டனத்துக்குரிய விடயமாகும். வடமாகாண முதல்வரும் வடமாகாண சபையும் மீண்டும் பிரபாகரனுக்கு உயிர்கொடுக்க நினைக்கின்றனரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
அண்மைக்காலமாக அவர்களின் போக்கில் நல்லெண்ண நகர்வுகள் எவையும் அவதானிக்கக்கூடியதாக இல்லை. எவ்வாறு இருப்பினும் மக்களையும் நாட்டையும் குழப்பும் எவருக்கும் அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டோம்.
வடமாகாண சபை சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றது. அதற்கான கோரிக்கையை விடுக்கின்றது. அதேபோல் வடமாகாண முதலமைச்சரும் செயற்பட்டு வருகின்றார். அவர்கள் எதை வேண்டுமானாலும் கேட்க முடியும். அவர்களுக்கு கதைப்பதற்கான உரிமையும் சுதந்திரமும் உள்ளது. ஆனால் வடக்கு அரசியல் தலைமைகள் கேட்பதை எல்லாம் கொடுக்கவேண்டும் என்ற தேவை எமக்கு இல்லை.
அவர்கள் நாட்டை குழப்பி பிரிவினையை ஏற்படுத்த முன்வைக்கும் கருத்துகளை எல்லாம் கவனத்தில் கொண்டு அவர் களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டாம். அவர்கள் கேட்பதை எல்லாம் அரசாங்கம் கொடுக்கும் என எவரும் எதிர்பார்க்கக்கூடாது. வடக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை, அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்பதில் எமக்கு அக்கறை உள்ளது. அதேபோல் அவர்களின் காணிகளை விடுவிப்பதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பும் உள்ளது.
அதை அரசாங்கம் கூடிய விரைவில் பூரணப்படுத்தும். அவர்களையும் எம்முடன் இணைத்து ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். யுத்தத்தில் உடைந்த கட்டடங்களை எல்லாம் மீண்டும் கட்டியெழுப்பிவிட முடியும்.
ஆனால் உடைந்துபோயுள்ள மக்களின் மனங்களை மீண்டும் கட்டியெழுப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது என்பதற்காக அங்குள்ள பிரச்சினைகள் தீர்ந்துள்ளது என கூறமுடியாது. நாம் உருவாக்கியுள்ளது நல்லிணக்க யுகம் என்றாலும் மக்களின் மனங்களை கட்டியெழுப்பவேண்டிய தேவையும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.