பிரபாகரனின் பிறந்த தினம் – பொலிஸார் விசாரணை!

வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த புகைப்படத்தினை மறைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts