பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையானது: நடிகை கஸ்தூரி

தொலை இயக்கி (remote control) மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, தானும் போராடி தன் பிள்ளைகளையும் போராட வைத்து, அனைவருக்கும் ஒரே நியாயம் என்ற கொள்கையுடன் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையான தலைமைத்துவம் என்றும் இதனை யாரும் மறுக்க முடியாதென்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ”தலைவர் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை என்னுடன் தொடர்புபடுத்தி பேசுகின்றனர்” என ஆவேசப்பட்ட கஸ்தூரி, பிரபாகரனுக்கு சார்பாக கதைத்த தன்னை பலர் முகப்புத்தகம் ஊடாக விமர்சித்ததாக குறிப்பிட்டார். யுத்த காலத்தில் பிரபாகரனை காரணமாகக் கொண்டு வெளிநாடுகளுக்கு இலகுவாக வீசாக்களை பெற்றுச் சென்றவர்களுக்கு தன்னைப் பற்றி இழிவாக கதைப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லையென்றும், அவ்வாறானவர்களை தான் ஒரு பொருட்டாவே கருதுவதில்லை என்றும் கஸ்தூரி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனின் படையில் போராளிகளாக இருந்தவர்களை கண்கூடாக பார்த்தவள் என்ற ரீதியில், தமிழர்களுக்காக மாபெரும் தியாகத்தை செய்தவரே பிரபாகரன் என்றும், அவர் ஏனையவர்களை போல புறமுதுகு காட்டி ஓடிச்சென்று, வேறு அரசாங்கத்திடம் அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளவில்லை என குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts