விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை புரியாத புதிராக நீடிக்கிறது.
கர்நாடகாவும் தமிழகமும் காவிரியை மையப்படுத்தி, பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில், வைகோவின் நடவடிக்கையை சில அரசியல் கணக்குகளுக்குள் திணித்தும் பார்க்கின்றனர் பலர். இப்படி பல சர்ச்சைகளை எழுப்பியுள்ள கடித விவகாரம் குறித்து வைகோவிடம் கேட்ட பொழுது அவர் அளித்த விளக்கம்….
“உலகத்தில் யாருக்கும் இப்படிப்பட்ட சான்றிதழை தலைவர் பிரபாகரன் கொடுத்ததில்லை. தலைவர் பிரபாகரன் அந்தக் கடிதத்தில், ‘வைகோ உயிருக்குத் துணிந்து, மரணத்திற்கு அஞ்சாமல், இங்கு வந்ததை நினைக்கும்போது, நான் எனது மொழிக்காகவும், ஈழத் தமிழ் நாட்டிற்காகவும் ஆயிரம் முறை இறக்கலாம் என்ற தெம்பு ஏற்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாசகங்களைச் சொல்லும் தைரியம் உலகத்தில் யாருக்கும் கிடையாது; உலகத்தில் அவருக்கு நிகரான தலைவர் (பிரபாகரன்) யாரும் கிடையாது. அவர் என்னைக் குறிப்பிட்டு, இப்படிச் சொன்னது, எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்கியம்; மிகப்பெரிய விருது அது. அதுபோல, அவர் கழுத்தில் கட்டியிருந்த சயனைடு குப்பியை, என்னைத் தவிர வேறு யாருக்கும் கழுத்தில் கட்டிவிட்டது கிடையாது. அதுவும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
தலைவர் பிரபாகரன், என்னை அதிகமாகப் புகழ்ந்து எழுதிய கடிதத்தை கலைஞர் ரசிக்கவில்லை. இதை நான் குறையாகச் சொல்லவில்லை. அந்தக் கடிதத்தில், அவரைப் பற்றி தலைவர் பிரபாகரன் அதிகமாக எழுதியிருப்பார் என்று கலைஞர் நினைத்திருப்பார். ஆனால், அந்தக் கடிதம், என்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது. அதனால், கலைஞர் அதை ரசிக்கவில்லை. அந்தக் கடிதத்தை வாசிக்கும்போது, கலைஞர் வெளிப்படுத்திய முகபாவனைகளில் இருந்து அதை நான் புரிந்து கொண்டேன். கடிதத்தைப் படித்து முடித்த கலைஞர், ’பற்று இருக்கலாம்; வெறி இருக்கக்கூடாது’ என்று எனக்கு அறிவுரை கூறினார். சில மாதங்கள் கழித்து, ’அந்தக் கடிதம் எதற்கு? எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்னைகள் வரும். அதனால், அதை கிழித்துவிட்டேன்’ என்று கலைஞர் என்னிடம் கூறினார்.
இந்தச் சம்பவங்கள் நடந்தபோது, கடல் புலிகள் தலைவர் சூசை, சிகிச்சைக்காக இங்கு வந்து தங்கியிருந்தார். நான் ஈழம் சென்று திரும்பியதை அறிந்த சூசை, இரவு 10 மணிக்கு என்னைப் பார்க்க வந்தார். “அண்ணா, நீங்கள் பத்திரமாக திரும்பிவீட்டீர்களா? என்று தலைவர் கவலையோடு விசாரித்துக் கொண்டிருக்கிறார்” என்று கேட்டவரிடம், ’தலைவர் பிரபாகரன் அவர்கள், கலைஞருக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார். நான் அதை காலையில் போய் அவரிடம் கொடுக்கப்போகிறேன்’ என்றேன். அப்போதுகூட எனக்கு அதை பிரதி எடுக்கும் எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சூசைதான், ’அண்ணா, இதை ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதோடு, அவரே கிளம்பிப்போய், எங்கேயோ பிரதி எடுத்துவந்து, இரவு 11.30 மணிக்கு என்னிடம் கொடுத்தார். இது யாருக்கும் தெரியாது. நான் இதை யாரிடமும் சொல்லவில்லை. இதை நீண்ட காலமாக பூட்டியே வைத்திருந்தேன். தலைவர் பிரபாகரன் என் மீது எவ்வளவு நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்தார் என்பதற்கு அவருடைய இந்தக் கடிதமே சாட்சி. இதை எப்போதாவது ஒரு கட்டத்தில் வெளியிட்டுத்தானே தீர வேண்டும். கடந்த நான்கைந்து வருடங்களாக இதைப்பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன். ‘தமிழ் ஈழம்’ என்ற உணர்வு மீண்டும் இப்போது கிளர்ந்து எழ வேண்டிய ஒரு காலம். மீண்டும் ஒரு பெரும் அழிவு நடப்பதற்குள் அந்தக் கிளர்ச்சி எழ வேண்டும். ஏனென்றால், மொத்தமாகவே, பெரும் அழிவும் இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிற நேரம் இது. இந்தக் கட்டத்தில் இந்தக் கடிதம், ஈழ உணர்வாளர்கள் மனதில் ஒரு எழுச்சியை உருவாக்கும் என்று என் மனதில் பட்டது. இதை இனியும் தாமதப்படுத்த வேண்டாம். ஏற்கனவே, 28 வருடங்கள் ஓடிவிட்டது. வாழ்க்கையில் சில நல்லவற்றை வெளி உலகுக்கு காட்டாமல் போவது நல்லதல்ல. எனவே, இனியும் தாமதிக்கக்கூடாது என்று யோசித்துத்தான் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தை வெளியிட்டேன்.”