டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54.
பாலமுரளி மோகன் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். விவேக்குடன் நடித்த டி.வி. நிகழ்ச்சி செய்தி வாசிப்பாளர் தேர்வு காமெடி பிரபலமானது.
‘‘வாளைப்பழ தோல் வழுக்கி வாலிபர் உயிர் ஊஷல்’’, ‘‘தேர்தலில் ஆச்சியை பிடிப்பது யார்’’ என்று துணை நடிகையை பேச வைத்து விவேக்கும் பாலமுரளி மோகனும் பண்ணும் காமெடி பேசப்பட்டது.
இதுபோல் தென்றல், வம்சம் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தார்.
நேற்று காலை அவரது படுக்கை அறையை தட்டிய போது கதவு திறக்கவில்லை. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் வேப்பேரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்ஸ்பெக்டர் பிரபு, சப்–இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விரைந்து சென்று கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு மின் விசிறியில் பாலமுரளி மோகன் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
மரணம் அடைந்த பாலமுரளி மோகனுக்கு சீதாராணி என்ற மனைவியும், உமாசங்கர் என்ற மகனும் உள்ளனர்.