ரஜினி, கமல் போன்ற முக்கிய நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆர் சி சக்தி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.
ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம், கமல் ஹாஸனை வைத்து உணர்ச்சிகள், லட்சுமி நடித்த தவம், வரம், ரகுவரன் நடித்த கூட்டுப் புழுக்கள், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் ஆர்சி சக்தி.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் திரைத் துறையில் நாட்டம் கொண்டிருந்தார். சுப்பு ஆறுமுகம் நடத்திய வில்லுப்பாட்டு குழுவில் சேர்ந்தார். பின்னர் அன்னை வேளாங்கன்னி படத்துக்கு திரைக்கதை எழுதினார்.
பின்னர் 1972-ம் ஆண்டு கமல் ஹாஸனை வைத்து உணர்ச்சிகள் படத்தை எழுதி இயக்கினார். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய விஷயத்தை எடுத்து படமாக்கி, விமர்சகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.
1978-ல் ஆர் சி சக்தி இயக்கிய மனிதரில் இத்தனை நிறங்களா படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதில் கமல் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டில் ரஜினியை வைத்து தர்மயுத்தம் படத்தை இயக்கி பெரும் வெற்றி கண்டார்.
லட்சுமியை வைத்து அவர் இயக்கிய சிறை படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழக அரசின் விருதையும் பெற்றது. ஆர் சி சக்தி கடைசியாக இயக்கிய படம் பத்தினிப் பெண். 1993-ல் வெளியான இந்தப் படத்துக்கு தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதும் கிடைத்தன.
ஆர் சி சக்தி கடந்த ஆண்டுதான் தனது பவள விழாவைக் கொண்டாடினார். கமல் ஹாஸன் தலைமையில் இந்த விழா நடந்தது நினைவிருக்கலாம்.
சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடற்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ஆர் சி சக்தி, வட பழனியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு செஞ்சிலட்சுமி என்ற மனைவியும், செல்வம் என்ற மகனும், சாந்தி, மகேஸ்வரி ஆகிய மகள்களும், 5 பேரப் பிள்ளைகளும் உள்ளனர். அவருடைய உடல் விருகம்பாக்கம் சாய்நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.