உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.
ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டொக்டர் விஜயராகவன் ஜானகிராமன் தெரிவித்தார்.
அவரும் அவரது நண்பரும் சக மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், இதர ஐந்து மில்லியன் டொலர்களை வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் அளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அப்பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு முன்னர் வழங்கியுள்ளது என்று தெரிவித்த டொக்டர் ஜானகிராமன், ஆறு மில்லியன் டொலர்கள் எவ்வளவு விரைவாக அவர்களிடம் அளிக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக அங்கு தமிழ்த்துறை தொடங்கும் என்று கூறினார்.
அடுத்த கல்வியாண்டு முதல் ஹார்வர்டில் தமிழ்த்துறை செயல்படத் தொடங்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அந்தத் துறையில் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த கற்கை நடவடிக்கைகளும் ஆய்வுகளும் இடம்பெறவுள்ளன என்றும், படிப்படியாக பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு ஆகியவையும் வரவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.