பிரதேச செயலகங்கள் மக்களின் பணியோடு நின்றுவிடாமல் சமூக பணியுடன் கலை பண்பாடுகளையும் பாதுகாக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற பண்பாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
எமது மாவட்டம் பல சோதனைகளை முடித்து மீள்குடியேற்றத்தை நிறைவுசெய்து ஒரு அபிவிருத்தி என்ற நோக்கிலே நீண்டதூரம் செல்லவேண்டியுள்ளது. பல தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. பிரதேச செயலகம் மக்கள் சேவை என்பதற்கு அப்பால் கலை, விளையாட்டுத்துறை போன்ற எல்லா துறைகளிலும் ஈடுபட்டு சமூகத்தோடும் பின்னிப் பிணைந்திருப்பது அவசியமானது.
பிரதேச செயலகங்கள் இருப்பது மக்களுக்கான சேவையை வழங்குவதற்கும் சமூகப் பண்பாடுகளை வளர்த்தெடுப்பதற்கும், கலைகளை அழிந்து போகாமல் பாதுகாப்பதற்கும், சமூகத்தோடு இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் தனது கடமைகளை செய்வது மட்டுமல்லாது சமூகப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது. சமூகத்தோடு இணைந்து செயலாற்றுவதற்கு சேவையாற்றுபவர் பாராபட்சமின்றி செயலாற்றவேண்டும்.
சில நிறுவனங்களுடைய தலைவர்கள் மக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியதாக இருப்பதை கண்கூடாக காணக்கூடியதாகவுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் இளையராக துடிப்புள்ளவராக மக்களோடு இணைந்து உரிய செயற்பாடுகளை விரைந்து செயலாற்றுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மீள்குடியேற்றம் நடைபெற்று இறுதியாக செயலாற்ற தொடங்கிய பிரதேச செயலகமாகும். பண்பாட்டு நிகழ்வை நடாத்துவதென்பது இலகுவான காரியமல்ல.
இடம்பெயர்ந்து மக்கள் மீளக்குடியேறியுள்ளமையால் மக்களிடம் உதவிகளை எதிர்பார்க்க முடியாது.
மாகாண சபையினால் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கு பண்பாட்டுத்துறையினை விருத்திசெய்வதற்காக நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதி சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து பண்பாட்டு பேரணி ஆரம்பித்து பிரதேச செயலக மண்டபத்தை சென்றடைந்தது, அரங்க நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் இ.பிரதாபன் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்பு நடனம் கலை இலக்கியப்போட்டிகள் மற்றும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கல், கலைஞர்கள் மதிப்பளித்தல் என்பவற்றுடன் பண்பாட்டு விழாவை முன்னிட்டு புதுவையாள் இரண்டாவது நூலை மாவட்டச் செயலாளர் வெளியிட வடமாகாண சபை உறுப்பினர்களான சி.சிவமோகன், து.ரவிகரன், திருமதி.மேரிகலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.