மீளக்குடியமராமல் உள்ள வலி.வடக்கு மக்கள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
தற்போது திரட்டப்படும் விவரங்கள் உண்மையான எண்ணிக்கையாக இருக்காது என்று மீள் குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.குணபாலசிங்கம் தெரிவித்தார்.
இது மீள் குடியமர்வை இழுத்தடிப்பதற்கான முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார். வலி. வடக்கில் மீள் குடியமர வேண்டிய மக்கள் தொடர்பில் தன்னிடம் விவரங்கள் எதுவும் இல்லை என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றபோதும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் யாழ்.மாவட்ட செயலக புனர்வாழ்வுக் கிளையில், வலி.வடக்கில் மீள் குடியமர வேண்டிய மக்கள் தொடர்பான விவரங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2005ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக வலி.வடக்கில் மீள் குடியமர வேண்டிய மக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் பதிவுகளை மேற்கொண்டனர். பகிரங்கமாக விடுக்கப்பட்ட அறிவித்தல் ஊடாகவே இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் வெளியிடங்களில் உள்ளவர்களும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் யாழ்.மாசட்ட செயலகத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் மீளாய்வு நடவடிக்கைகள் வெளியிடங்களில் உள்ளவர்களுக்குத் தெரியாத காரணத்தால், அவர்கள் தமது பழைய பதிவை மீளாய்வு செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் அவர்களின் பெயர்கள் மீள் குடியமர்த்த வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலைமை தோன்றியுள்ளது. மேலும் இந்தப் பதிவு நடவடிக்கைகளின் போது சில பிரதேச செயலாளர் பிரிவில், கணி உறுதி உள்ளவர்கள் மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்றும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்காக இங்குள்ளவர்கள் பதிவு செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே தேவையில்லாத மீளாய்வு நடவடிக்கைகளை விடுத்து மக்களைச் சொந்த மண்ணில் குடியமர்த்துமாறு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் கேட்டுள்ளார்.