பிரதம நீதியரசரை விசாரணை செய்த தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சியினர் விலகல்

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழு தலைவர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளுக்கு தெரிவுக்குழு தலைவர் இணங்கினால் எதிர்வரும் காலங்களில் தெரிவுக்குழு விசாரணையில் கலந்து கொள்வதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் தெரிவுக்குழு முறையான நடவடிக்கையை கையாளவில்லை என தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, இரா. சம்பந்தன் மற்றும் விஜித ஹேரத் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts