பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனநாயகம் மற்றும் ஒழுக்கநெறி மிக்க முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாம் மேலும் ஆற்ற வேண்டிய பாரிய பல பணிகள் நம் முன்பே உண்டு என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்திலேயே புது வருடம் பிறக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் நாடு என்ற வகையில் நாம் பெறுமதியான பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளோம். அவ்வாறே ஜனநாயகம் மற்றும் ஒழுக்கநெறி மிக்க முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாம் மேலும் ஆற்ற வேண்டிய பாரிய பல பணிகள் நம் முன்பே உள்ளன.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை சர்வாதிகாரமாக மாற்றிய 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை ரத்துச் செய்ய முடிந்தமை நாம் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாகும். அவ்வாறே எமது நாடு தொடர்பாக சர்வதேச ரீதியாகக் காணப்பட்ட சர்ச்சைக்குரிய, இருண்ட சூழ்நிலையை நீக்கி, நட்புறவு மிக்க சர்வதேசத் தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தமை நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பக்கபலமாய் அமையும்.

மானிட இருப்புக்கு எதிரான குற்றங்கள், வீண்விரயம், ஊழல் என்பவற்றைக் குறைக்க முடிந்தமை, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க முடிந்தமை, தகவலறியும் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தமை, ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்தல், நாட்டின் பொருளாதாரத்தினால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்தில் கடன் சுமை காணப்பட்டபோதும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு உதவியளிக்க முடிந்தமை, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி பொருளாதார அபிவிருத்திக்கு அடித்தாளமிட முடிந்தமை போன்ற பல வெற்றிகளை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடு மற்றும் நல்லாட்சியை வீழ்த்துவதற்காகத் தூரநோக்கற்ற, பல தீய சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கும் ஓர் சூழலில் நிலையானதோர் பொருளாதாரம், நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை வெற்றிக் கொண்ட மனிதநேயமிக்க சமூகமொன்றைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும்.

2017 புது வருடம் அதற்காகப் பரந்த மனப்பாங்கு மாற்றத்துடன் அர்ப்பணிப்போடு செயற்படுவதற்கான தைரியம் மிக்க ஆண்டாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் சிறப்பான நோக்கங்கள் அடையப் பெறும் புது வருடமாக அமையட்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts