நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு மத்தியில், பிரதமரை தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்திக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
அச்சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நோக்கி ஏதோ ஒரு பொருள் வீசப்பட்டதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இலங்கை சரித்திரத்தில் இவ்வாறான ஒரு மோசமான சம்பவத்தை தான் நாடாளுமன்றில் அவதானிக்கவில்லையென்றும், அவமானத்திற்குரியதென்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவே, குழப்ப நிலையை ஆரம்பித்ததாகவும் ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சபை நடுவில் மயங்கி விழுந்துள்ளார். அவர் நாடாளுமன்றிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில், காலை உணவை உட்கொள்ளாமையே மயக்க நிலைக்கு காரணம் என அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.