பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நிறைவேற்றம்!

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியின் மூலம் செலவீனங்களை மேற்கொள்ள பிரதம செயலாளருக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டு குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வாக்களித்தன.

அதன்மூலம் 123 வாக்குகளால், பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்துவதோடு, அரச நிதியை பிரதமரின் செயலாளர் கையாளும் அதிகாரத்தையும் நிறுத்தும் வகையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 14ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அமைச்சரவை கலைக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். அதன்மூலம், அரச நிதியின் மீதான பூரண கட்டுப்பாட்டை நாடாளுமன்றம் கொண்டிருப்பதாகவும், அந்த நிதியை கையாள பிரதமரின் செயலாளருக்கு அனுமதியில்லையென்றும் தெரிவித்து குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரும் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நாளை காலை 10.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts