பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைகளில் கம்புகளையும் தடிகளையும் கட்டபோல்களையும் (catapult- கவண்) ஏந்தியபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதி வருகின்றனர்.
நேற்றிரவு முழுவதும் நடந்த வன்முறைகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவிவிலகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று சனிக்கிழமை மாலை பிரதமரின் இல்லத்தையும் நாடாளுமன்றக் கட்டடத்தையும் நோக்கி படையெடுத்திருந்தனர்.
நாடாளுமன்ற மைதானத்துக்குள் நுழைந்திருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கைகளில் சுத்தியல்கள், குறடுகள் (wire cutters) போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர்.
அரசாங்கத்துக்கும் எதிர்ப்பு அணித் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் நிர்வாகம் நெருக்கடியின் உச்சத்தில் இருப்பதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டின் பெரிய நகரமான கராச்சியிலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.