பிரதமரின் பிணை யோசனைக்கு த.தே.கூ எதிர்ப்பு

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதி, தாய்வானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் அவரை சந்திப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எனினும், அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை, உயர்மட்டக் குழுக் கூட்டமொன்று சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு நவம்பர் முதல் வார இறுதிக்குள் சட்டபூர்வமான முறையில் பிணை வழங்குவதற்கும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அலரிமாளிகையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான விசேட கூட்டத்தில், சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பொலிஸ் மா அதிபர் என்.இலங்கக்கோன், பிரதி சட்ட மா அதிபர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், பிரதமர் தலைமையிலான கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் வினவியபோது,

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் செய்ய வேண்டிய கருமங்களை செய்வோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் உயர் பீட உறுப்பினர்களிடம் கலந்துரையாடி வருகின்றோம். அது தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் எப்போது கலந்துரையாடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. அது தொடர்பில் இப்போது எதுவும் கூறமுடியாது என்றார். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் அனைவருக்கும் அறியத்தருவோம் என்றும் அவர் கூறினார்.

Related Posts